என் மகன்

Posted on 12 Aug 2016 in Literature


கையிலேயே ஒரு கவிதை தினமும் எனைப்பார்த்து கண் சிமிட்ட, வளர்ந்து வரும் கவிதையிது...

son

சித்திரையில் ஒரு நாளென்
நித்திரையில் உதித்தாய்
பத்திரமாய் நகர்ந்தென்
பத்தினியில் முளைத்தாய்
தத்தளித்து முழுகி- நீ
முத்துபோல் மிதந்தாய்
இத்தனையும் கனவென
அத்துடனே முடித்தாய்

எப்பொழுதோ படிக்கையில்
கதையொன்றில் இதுபோல்
அத்தனையும் வருகையில்
இதையெண்ணி வியந்தேன்
அப்பொழுதே அழைத்தெனை
கண்டதெல்லாம் முன்னாள்
நனவென சொன்னாள்
இன்பத்தில் மிதந்தேன்.

உன்னை சுமக்கயில்
பட்ட துயரமெல்லாம் - நீ
விட்ட உதையொன்றில்
தூள்தூளாய் போனதென்றாள்
என்னையும் ஒருமுறை
கதையொன்று சொல்லுகையில்
வாயிலே உதைத்தாயடா - அதிலே
மேலிட்டு சிரித்தாளவள்.

நாட்கள் கடந்தன
வாரங்கள் ஓடின
நாளதும் வந்ததடா - உன்னை
கைகளில் ஏந்திடவே
பிஞ்சுக்கை கால்களால்
நெஞ்சம் நிறைத்திருக்க
முகம் சிவந்தழுதாயடா
மொழிகடந்த இசைபோலே.

வயிற்றுக்கு இட்டபின்
அன்னை மடியினில்
அயர்ந்தங்கே தொட்டிலாய்
கண்கொஞ்சம் துயில்வாயே
உயிர் சிலிர்த்துத்தான்
வாஞ்சை உறுவாளவள்
அருகில் கண்டு - சேர்ந்தே
மகிழ்வேன் நான்.

ஈராறு வாரங்கள்
இவ்வாறே சுழன்றது
கண்மூடி திறக்குமுன்
சத்தங்கள் செய்வித்தாய்
குரல்வளை ராகங்கள்
பாடிச் சிரிப்பாய்
பற்களற்ற வாயினால்
உருகிடச் செய்திடுவாய்

யாரோடோ எவரோடோ
உனக்கென்றோர் உலகத்தில்
பேசிச்சிரித்து கத்திமுனகி
உரையாடி ஓய்ந்திருப்பாய்
பாலூட்டி தாலாட்டி
தூங்கிடச் செய்தால்
காலாட்டி வாலாட்டி
சேட்டைகள் செய்விப்பாய்.

இப்படியே ஒருநாள்
உனது பெருமைகள்
சொல்லிச் சிரிக்கயில்
குப்பற கவிழ்ந்தாயடா
தலைசாய்த்து எழுந்து
மீண்டுமுகம் புதைத்து
புன்னகை பூத்தாயடா - அழகை
என்னென்று இயம்பிடுவேன்.

ஊரார் சொல்லுகையில்
அதென்ன விந்தையென்றேன்
சேயோடு ஒருநொடியும்
சிறுகோபம் வந்ததில்லை?
அனுபவத்தில் உணருகையில்
நானுமின்று சொல்லுகிறேன்
முகம்பார்த்து சிரிக்கயிலே
கடுங்கோபமும் கரையுதம்மா!

தள்ளுநடை வண்டியில்
உன்னுடன் நடக்கின்றேன்
தள்ளிநின்ற அழைக்கயில்
என்னருகினில் வருகின்றாய்
பார்க்கையில் நானுன்னை
பயிற்றுவித்து வளர்க்கின்றேன்
உண்மையில் நீயெந்தன்
விரல்பற்றி வளர்க்கின்றாய்.

-அன்பன் பாபு.

Comments